வரிக்குதிரைகளுக்குக் குரைக்கவும் தெரியும் | உயிரினங்களின் மொழி - 6
வரிக்குதிரைகள் ஒன்றோடு மற்றொன்று தொடர்புகொள்ள ஒலி மொழியை உபயோகிக்கின்றன. ஜோஹன்னஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வுகள், வரிக்குதிரைகளின் ஒலி மொழியில் பல புதிய தகவல்களைக் கண்டுபிடித்துள்ளன. வரிக்குதிரை மென்மையாகக் கனைக்கிறது என்றால், அது அன்பின் வெளிப்பாடு. உதாரணத்திற்கு, தாய் வரிக்குதிரை, “இங்கே வாடா செல்லம்” என்று குட்டியை அழைப்பது போன்றது.

வரிக்குதிரைகள் ஆப்ரிக்கப் புல்வெளிகளில் வாழும் விலங்குகள். கறுப்பு வெள்ளைக் கோடுகளைக் கொண்ட வரிக்குதிரைகளில் மூன்று வகைகள் உண்டு. புல்வெளிகளில் அகலமான வரிகளுடன் காணப்படுபவை சமவெளி வரிக்குதிரைகள். வறண்ட நிலங்களில் மெல்லிய வரிகளுடன் உலவுபவை கிரேவி வரிக்குதிரைகள். மலைப் பகுதிகளில் அதிகம் வெள்ளை வரிகளுடன் இருப்பவை மலை வரிக்குதிரைகள். எங்கு வாழ்ந்தாலும் கூட்டம் கூட்டமாக வாழும் இயல்புடையவை.
சில வரிக்குதிரைகளுக்குக் கறுப்பில் வெள்ளைக் கோடுகளும், சிலவற்றுக்கு வெள்ளையில் கறுப்புக் கோடுகளும் இருக்கும். சட்டெனப் பார்ப்பதற்கு வித்தியாசம் தெரியாது. ஆனால், மனிதர்களின் கைரேகைகளைப் போல இந்தக் கோடுகள் தனித்துவமானவை.
What's Your Reaction?