'மியாவ்' என்றால் என்ன?
பூனைகளின் முதல் மொழி, அவற்றின் உடல் அசைவு. உங்கள் பூனை உங்களைப் பார்த்துக் கண் சிமிட்டுகிறதா? அது உங்களிடம், ’நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று சொல்கிறது! தன் வாலை நேராக நிமிர்த்திக்கொண்டு வருகிறதா? அது ஓர் அன்பான வணக்கம். குறுக்காக வாலை ஆட்டுகிறதா? ’நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்’ என்று அர்த்தம்.

உயிரினங்களின் மொழி - 4
நீண்ட காலமாக மனிதர்களோடு இணைந்து வாழ்ந்து வரும் விலங்குகளில் பூனைகளுக்கு முக்கிய இடம் உண்டு. எகிப்திய நாகரிகத்தில் கடவுளாக வணங்கப்பட்டவை.
மென்மையான நடையும் கூர்மையான பார்வையும் கேட்கும்திறனும் கொண்டவை பூனைகள். நாம் நினைப்பதை விடவும் நுட்பமான மொழியாற்றலைக் கொண்டுள்ளன.
இரவில் மின்னும் கண்கள், நுனி வரை நிமிரும் வால், மென்மையான நடை, விளையாட்டு ஆர்வம் என இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான தகவல் பரிமாற்றம். அவற்றின் ஒவ்வோர் அசைவும் ஒலியும் குறிப்பிட்ட செய்தியைத் தெரிவிக்கும்.
பூனைகளின் முதல் மொழி, அவற்றின் உடல் அசைவு. உங்கள் பூனை உங்களைப் பார்த்துக் கண் சிமிட்டுகிறதா? அது உங்களிடம், ’நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று சொல்கிறது! தன் வாலை நேராக நிமிர்த்திக்கொண்டு வருகிறதா? அது ஓர் அன்பான வணக்கம். குறுக்காக வாலை ஆட்டுகிறதா? ’நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்’ என்று அர்த்தம்.
ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள், பூனைகளின் 'மியாவ்' ஒலிக்குப் பதினாறுக்கும் மேற்பட்ட வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளார்கள். நாம் கேட்கும் சாதாரண மியாவ் ஒலி, உணவு கேட்கும் வேண்டுகோளாகவோ அன்பின் வெளிப்பாடாகவோ கவலையின் பகிர்வாகவோ இருக்கலாம்.
வளர்ப்புப் பூனைகள் குழந்தைகளின் அழுகை போன்று ’மியாவ்’ என ஒலி எழுப்பப் பழகிக்கொண்டுள்ளன. இது மனிதர்களின் பாச உணர்வைத் தூண்டுவதற்காகப் பூனைகள் படிப்படியாக வளர்த்துக்கொண்ட திறன் என்று சுவீடன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வுகளின்படி, பூனைகளின் குர்-குர் (Purring) ஒலி வெறும் சந்தோஷத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல. 25 முதல் 150 ஹெர்ட்ஸ் வரையிலான இந்த அதிர்வுகள் ஒரு சுய மருத்துவ முறையாகவும் செயல்படுகின்றன. காயங்களைக் குணப்படுத்தவும், எலும்பு வளர்ச்சியை ஊக்குவிக்கவும், வலியைக் குறைக்கவும் இந்த அதிர்வுகள் உதவுகின்றன.
What's Your Reaction?