மார்கழி மகா உற்சவம் 3: பரந்தாமன் திருவடிகளில் சரண் புகுவோம்!
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி | நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் |

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி | நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் ||
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து | ஓங்கு பெருஞ்செந்நெல் லூடு கயலுகளப் ||
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத் | தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி ||
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் |
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய் || (திருப்பாவை 3)
வாமன அவதாரம் எடுத்து தனது ஓரடியால் உலகத்தை அளந்த அந்த ஸ்ரீமன் நாராயணனின் பெயரைச் சொல்லி நாம் அவன் புகழ் பாடுவோம். அவன் புகழ் பாடியபடி பாவை நோன்புக்காக நாங்கள் அதிகாலை நீராடினால், நாடு முழுவதும் மாதம் மும்மாரி மழை பெய்யும். அதனால் செந்நெல் வயல்களில் பயிர்கள் வளர்ந்து அதன் இடையில் மீன்கள் துள்ளித் திரியும். நீர்நிலைகளில் பூத்துக் குலுங்கும் குவளை மலர்களில் வண்டினங்கள் வந்தமர்ந்து தேன் பருகும். பசுக்கள் பாலால் குடங்களை நிறைத்து விடும். அழிவற்ற செல்வம் எங்கும் நிறையும் என்று கூறி தனது தோழிகளை மார்கழி நீராட அழைக்கிறாள் கோதை.
What's Your Reaction?