அறியாமை இருளில் இருந்து எழுவோம்..! | மார்கழி மகா உற்சவம் 6
இன்னுமா உறங்குகிறாய்? பறவைகளுக்கு அரசனான கருடனை வாகனமாகக் கொண்ட இறைவன் எழுந்தருளியுள்ள கோயிலிலிருந்து வெண்சங்கின் பேரோளி உன் காதில் விழவில்லையா? நமது கண்ணன், வஞ்சனையால் வந்த பேய் மகள் பூதனை மார்பில் தடவிய நஞ்சை உண்டவன்.

புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில் |
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? ||
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு |
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி ||
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை |
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் ||
மெள்ள ழுந்து அரியென்ற பேரரவம் |
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய் ||
(திருப்பாவை 6)
பெண்ணே..! பறவைகள் குரலெழுப்பி கூவத் தொடங்கி விட்டன. இன்னுமா உறங்குகிறாய்? பறவைகளுக்கு அரசனான கருடனை வாகனமாகக் கொண்ட இறைவன் எழுந்தருளியுள்ள கோயிலிலிருந்து வெண்சங்கின் பேரோளி உன் காதில் விழவில்லையா? நமது கண்ணன், வஞ்சனையால் வந்த பேய் மகள் பூதனை மார்பில் தடவிய நஞ்சை உண்டவன். சகடாசுரனை எட்டி உதைத்த திருவடிகளையுடையவன். திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமன், உலகுக்கெல்லாம் வித்தானவன். முனிவர்களும், யோகிகளும் ‘ஹரி’ என்று அவன் பெயரைச் சொல்லி அழைக்கின்றனரே.. அந்தப் பேரொலி உன்னைக் குளிர வைக்கவில்லையா? உடனே எழுந்து வா என்று தன் தோழியை, பரமன் புகழ்பாடி மார்கழி நீராட அழைக்கிறாள் கோதை.
What's Your Reaction?