சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு வழிபாடுகள் நிறைவு: பிப்.12-ல் மீண்டும் நடை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு வழிபாடுகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இன்று காலையில் நடை சாத்தப்பட்டது. அடுத்ததாக பிப்.12-ம் தேதி மாதாந்திர பூஜைக்காக நடை திறக்கப்படும் என்று தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு வழிபாடுகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இன்று காலையில் நடை சாத்தப்பட்டது. அடுத்ததாக பிப்.12-ம் தேதி மாதாந்திர பூஜைக்காக நடை திறக்கப்படும் என்று தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 15-ம் தேதி நடை திறக்கப்பட்டது. 41 நாள் தொடர் வழிபாடுகளுக்குப் பின்பு டிச.26-ம் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. பின்பு நடை சாத்தப்பட்டு மகரவிளக்கு பூஜைக்காக டிச.30-ல் கோயில் திறக்கப்பட்டு கடந்த 14-ம் தேதி உச்சநிகழ்வான மகரவிளக்கு பூஜை நடைபெற்றது.
அன்று ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ஜோதியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர், பின்பு மகரசங்கராந்தி வழிபாடுகள் நடைபெற்றன. மகரவிளக்கு வழிபாடுகள் முற்றிலும் நிறைவடைந்த நிலையில் நேற்று (ஜன.19) இரவு 11 மணி வரை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி நேற்று தரிசனம் முடித்த பக்தர்கள் அனைவரும் இரவில் சபரிமலையில் இருந்து பம்பைக்குத் திரும்பினர்.
What's Your Reaction?