சக்தித் திருமகன் | ஊழல் பூதத்துடன் மோதும் புத்திமான்!
தன் தாயின் மரணத்துக்கு பழிவாங்கும் ஒருவனின் கதைபோல் மேலோட்டமாகத் தோன்றினாலும் இந்தியாவின் நிகழ்கால ‘சிஸ்டம்’ மீது இவ்வளவு கூர்மையான தாக்குதலைத் தொடுத்த புத்திசாலித்தனமான அரசியல் படம், சமீப காலங்களில் வரவில்லை என்றே கூறிவிடலாம்.

ஊழலுக்கு எதிராகத் தமிழ் வெகுஜன சினிமாக்கள் காலந்தோறும் குரல் கொடுத்து வந்திருந்திருக்கின்றன. என்றாலும் மாஸ் கதாநாயகர்களைக் கொண்டு, பொழுதுபோக்கு தன்மைக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவான ஊழல் எதிர்ப்புப் படங்கள் குறைவாகவே வந்துள்ளன. ஷங்கரின் ‘ஜெண்டில்மே’னும் ஏ.ஆர்.முருகதாஸின் ‘ரமணா’வும் அந்த குறைந்த எண்ணிக்கையில் நினைவில் நிற்கின்றன.
தற்போது, அருண் பிரபு எழுத்து, இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘சத்தித் திருமகன்’ ஊழலின் சகலவித ஊற்றுக் கண்களையும் பிரித்து மேய்ந்திருக்கிறது. ‘மாதம் 2ஆயிரம் ரூபாய் வருமானம் கொண்ட ஓர் ஏழை, ஒரு லிட்டர் சமையல் எண்ணேயை 300 ரூபாய் கொடுத்து எப்படி வாங்க முடியும்?’ என்று கேட்டு, மிக எளிய விளிம்பு மக்கள், ஊழலால் எவ்வாறு வறுமையில் தொடர்ந்து உழல்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கும் அதிரடியான மாஸ் அரசியல் சினிமா இப்படம்.
What's Your Reaction?