எலிகளின் ரகசிய மொழி

ஓர் எலி உணவு கிடைக்கும் இடத்தைக் கண்டறிந்தால், அது மற்ற எலிகளுக்கு இரண்டு வழிகளில் தகவல் அளிக்கிறது. குறிப்பிட்ட ஒலி அழைப்புகள் மூலமும் உடல் அசைவுகள் மூலமும் உணவு இருக்கும் திசையைக் காட்டுகிறது. இரண்டாவதாக, உணவு இருக்கும் இடத்திற்கு வழிகாட்டும் வாசனைத் தடங்களை உருவாக்குகிறது. இது  ஒரு வரைபடம் போலச் செயல்பட்டு, மற்ற எலிகளை நேராக உணவு இருக்கும் இடத்திற்கு வழிநடத்துகிறது.

Mar 14, 2025 - 14:25
 0  3
எலிகளின் ரகசிய மொழி


உயிரினங்களின் மொழி- 10

அழையா விருந்தாளியாக வீட்டுக்குள் எப்போதும் அலைந்து கொண்டிருக்கும் உயிரினம் எலி. அதன் கீச்... கீச்... ஒலி ஒரு முழுமையான சிம்பொனி என்று டோக்கியோ பல்கலைக் கழகத்தின் நரவோ திமுரா கூறினார். இந்தப் பூமியில் நடக்கும் பல உரையாடல்கள் நம் காதுகளை எட்டுவதில்லை. அது போலவேதான் இதுவும்.

2018ஆம் ஆண்டு டோக்கியோ பல்கலைக் கழகத்தில் நடந்த ஆய்வின்படி, எலிகள் மனிதர்கள் கேட்க முடியாத அல்ட்ராசோனிக் அதிர்வெண்களில் அதாவது (20 கிலோ ஹெர்ட்ஸுக்கு மேல்) தொடர்புகொள்கின்றன. இந்த ஒலிகள் 50 கிலோஹெர்ட்ஸ் வரை செல்லக்கூடும்.

22 கிலோஹெர்ட்ஸ் அளவில் உள்ள சத்தம் அச்சுறுத்தல் அல்லது அபாயத்தைக் குறிக்கிறது. உதாரணமாக, ஒரு பூனை அல்லது பாம்பைக் கண்டால் அனைத்து எலிகளும் அதனைத் தெரிந்துகொள்ள இந்த அதிர்வெண்ணில் சத்தமிடுகின்றன. அதே 50 கிலோஹெர்ட்ஸ் என்றால் சந்தோஷம், ஆர்வம் அல்லது நல்ல உணவு கிடைத்திருப்பதைக் குறிக்கிறது. ஓர் எலி சுவையான உணவைக் கண்டறிந்தால், அது இந்த அதிர்வெண்ணில் ஒலி எழுப்பி மற்ற எலிகளை அழைக்கும்.

40 கிலோஹெர்ட்ஸ் ஒலி சமூகத் தொடர்புகளை ஏற்படுத்தப் பயன்படுகிறது. எலிகள் ஒன்றுக்கு மற்றொன்று அறிமுகமாகும்போது அல்லது சமூக உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளும்போது இந்த அதிர்வெண்ணில் உரையாடுகின்றன. காதுகளின் இயக்கம் மற்றும் முக ​​பாவனைகள் மூலமும் அவை உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. காதுகளை முன்னோக்கி நகர்த்தினால் ஆர்வமுடன் இருக்கின்றன என்று அர்த்தம். அதே பின்னோக்கி நகர்த்தினால் அச்சத்தைக் குறிக்கும்.

மூக்கு மற்றும் உதடுகளின் அசைவுகள் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. இருநூறுக்கும் மேற்பட்ட முகபாவனை மாற்றங்களை ஆய்வாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர். இவை ஒவ்வொன்றும் அவற்றின் உணர்வு நிலைகளைப் பிரதிபலிக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஓர் எலி மகிழ்ச்சியாக இருக்கும்போது, மூக்கின் நுனிப் பகுதியில் துடிப்பு அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் அச்சம் அல்லது கோபத்தின்போது கன்னங்கள் இறுக்கமாகும். அதாவது ஓர் எலி தனது மூக்கைச் சுருக்கி, உதடுகளை அசைத்து, காதுகளை முன்னும் பின்னும் அசைக்கும்போது, அது ஒரு நீண்ட வாக்கியத்தைச் சொல்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow