‘உணர்வுசார் நுண்ணறிவு’ ஒருவருக்கு ஏன் அவசியம்?
முன்பு எப்போதையும்விடத் தற்போது பள்ளிகள், கல்லூரிகள், பணி இடங்களில் ‘உணர்வுசார் நுண்ணறிவு’ குறித்து அதிகம் பேசப்படுகிறது. பணி இடத்தில் இது ஒரு மதிப்புமிக்க முக்கியமான திறனாகப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரான யுவல் நோவா ஹராரியிடம், ’எதிர்காலத் தலைமுறையினருக்கு உங்கள் அறிவுரை என்ன?’ என்கிற கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர், ’21ஆம் நூற்றாண்டின் மிகவும் அத்தியாவசியமான திறன் - ’உணர்வுசார் நுண்ணறிவு’ (Emotional Intelligence). ஏனெனில் இந்த நூற்றாண்டில் பணிச்சூழல், பணியின் தன்மையில் வேகமாக மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்களைச் சமாளிப்பதற்கும், தொடர்கற்றல் மூலம் தங்களைத் தகுதிபடுத்திக்கொள்வதற்கும் உளவியல்ரீதியான மீள்தன்மை (Psychological Resilience) அவசியம்’ என்று பதிலளித்தார்.
போட்டித் தேர்வில் ‘உணர்வுசார் நுண்ணறிவு’
ஒரு நெருக்கடியை மனரீதியாகவும், உணர்வுரீதியாகவும் சமாளித்து நெருக்கடிக்கு முந்தைய நிலைக்கு விரைவாகத் திரும்பும் திறன்தான் உளவியல்ரீதியான மீள்தன்மை என்கிறோம். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கானத் தேர்வை நடத்தும் மத்தியப் பணியாளர் தேர்வாணையம் 2013ஆம் ஆண்டு முதல் பொது அறிவுத்தாள்-4 என்கிற தாளையும் முதன்மைத் தேர்வில் சேர்த்தது. இந்தத் தாளுக்குரிய பாடப்பகுதியில் ‘உணர்வுசார் நுண்ணறிவு’ தலைப்பும் ஒரு பகுதியாக உள்ளது. ராணுவத்தில் பணியாற்ற அதிகாரிகளைத் தேர்வு செய்யும் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணிகளுக்கான தேர்வில் (CDS) தலைமைப் பண்பு, குழு செயல்பாடு, சிக்கலான சூழ்நிலைகளில் முடிவெடுக்கும் திறன் ஆகியவை சோதிக்கப்படுகின்றன. ரயில்வே துறையில் துணை நிலைய அதிகாரி, உதவியாளர், ஓட்டுநர் போன்ற பணிகளுக்கான தேர்வில் உளவியல் தொடர்பான தேர்வும் இடம் பெறும். இந்திய விமானப்படை நடத்தும் ‘ஏர்மேன்’ பதவிக்கான தேர்விலும்கூட ‘Pilot Aptitude Battery Test’ (PABT) என்பது ஒரு பகுதியாக உள்ளது.
What's Your Reaction?