ஈரோடு எலத்தூர் குளத்தில் இயற்கை நடை
இயற்கை நடையில் நீர்க்காகம், தூக்கணாங்குருவி போன்ற உள்ளூர்ப் பறவைகள் கூடு அமைப்பதையும், வலசை வந்திருக்கும் நீலவால் பஞ்சுருட்டான், உள்ளூர் பறவைகளான நெடுங்கால் உள்ளான், புள்ளி மூக்கு வாத்து, சில்லை போன்றவற்றுடன், பல பூச்சிகள், தாவரங்களையும் காண முடிந்தது.

693 உயிரினங்கள் வாழ்வதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ள ஈரோடு எலத்தூர் குளத்தை அங்குள்ள பல்லுயிர்களின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, கடந்த செப்டம்பர் 1 அன்று தமிழ்நாட்டின் மூன்றாவது பல்லுயிர்ப் பாரம்பரியத் தளமாகவும் ஈரோடு மாவட்டத்தின் முதல் பல்லுயிர்ப் பாரம்பரியத் தளமாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்தது. பல்லுயிர் நிறைந்த எலத்தூர் குளத்தில் 204 பறவைகள், 174 பூச்சி இனங்கள், 228 தாவர வகைகள், 17 ஊர்வன, 18 எட்டுக்காலிகள், 20 மிதவை நுண்ணுயிரிகள், 8 பாலூட்டிகள், 24 இதர பல்லுயிர்கள் வாழ்கின்றன.
எலத்தூர் குளத்தை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி இ.ஆ.ப., பார்வையிட வந்ததையொட்டி இயற்கை நடை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இங்கு வாழும் பறவைகள், தாவரங்கள், பூச்சிகள், பிற உயிரினங்கள், குளத்தின் பல்வேறு வாழ்விடங்கள், குளக்கரையில் நடப்பட்டு வளர்ந்து வரும் மண்ணின் தாவரங்களை அவர் நேரில் பார்வையிட்டார். இயற்கை நடையில் நீர்க்காகம், தூக்கணாங்குருவி போன்ற உள்ளூர்ப் பறவைகள் கூடு அமைப்பதையும், வலசை வந்திருக்கும் நீலவால் பஞ்சுருட்டான், உள்ளூர் பறவைகளான நெடுங்கால் உள்ளான், புள்ளி மூக்கு வாத்து, சில்லை போன்றவற்றுடன், பல பூச்சிகள், தாவரங்களையும் காண முடிந்தது.
What's Your Reaction?