திரைப் பார்வை: நாங்கள் | பாலுமகேந்திராவை நினைவூட்டும் படைப்பு!

நம்முடைய தவறுகளையும் குறைகளையும் உடன் வாழும் உறவுகள் குறிப்பிட்டுக் குத்திக் காட்டுவதைப் பொறுத்துக்கொள்ள மறுக்கிறோம். ஆனால், நாய் போன்ற நம் வளர்ப்பு விலங்கு ஒருபோதும் நம்மைக் கேள்வி கேட்பதில்லை என்பதால், அதைப் பிரிய வேண்டிய அவசியமில்லாமல் போகிறது.

Apr 19, 2025 - 22:10
 0  4
திரைப் பார்வை: நாங்கள் | பாலுமகேந்திராவை நினைவூட்டும் படைப்பு!

ஊட்டியைக் கதைக் களமாகக் கொண்டு பல படங்கள் வந்திருக்கின்றன. குளிரும் வெயிலும் உறவாடும் தட்பவெப்பமும் வனமும் தோட்டங்களும் சூழ்ந்த பசுமையான நிலப்பரப்பும் என நீலகிரியை ஒளிப்பதிவிலும் கதாபாத்திரங்களின் உணர்வுகளிலும் ஒளிரச் செய்த ஒரு படைப்பாளி உண்டென்றால் அவர் சர்வ நிச்சயமாக பாலுமகேந்திரா தான். அவரைத் தன் முதல் படைப்பின் மூலம் திரைமொழியாலும் ஒலிப்பதிவாலும் தொட முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் அவினாஷ் பிரகாஷ்.

கொஞ்சம் தேயிலைத் தோட்டம், இன்னொரு பக்கம் கேரட், பீட்ரூட், ஸ்ட்ராபெர்ரி பழங்கள் விளையும் நிலம் என ஒரு சின்ன பண்ணைத்தோட்டத்துக்கு உரியவர் ராஜ்குமார் (அப்துல் ரஃபே). ஒரு பள்ளிக் கூடத்தையும் நீலகிரியில் நடத்திக்கொண்டிருக்கிறார். கருத்து வேறுபாட்டால் மனைவியைப் பிரிந்திருக்கும் அவருக்கு 14, 12, 10 வயதுகளில் மூன்று மகன்கள். பண்ணைத்தோட்டத்தின் நடுவில் இருக்கும் ராஜ்குமாரின் பங்களா வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. வீட்டின் குழாய்களில் தண்ணீர் வரவில்லை. அவர் நடத்தும் பள்ளியில் ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலை. செல்வாக்காக வாழ்ந்த ராஜ்குமாரின் குடும்ப வாழ்க்கை நிலச்சரிவில் சிக்கிய நிலம்போல் மனச்சரிவால் வீழ்ந்து கிடக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow