காலம் மறந்த அறிவியலாளர் எல்லப்பிரகதா சுப்பாராவ் - அத்தியாயம் 2
ஹார்வேர்டிலும் லெடர்லியிலும் தீவிர கல்லீரல் ஆய்வில் ஈடுபட்டார் சுப்பாராவ். கல்கத்தா ஆய்வுக்கழக வாய்ப்பு நழுவிச் சென்றுவிட, அமெரிக்காவில்தான் ஆய்வினைத் தொடர வேண்டுமெனும் நிலையில், லெடெர்லி ஆய்வகம் அவரை முழுநேர ஆராய்ச்சிப் பணிக்கு வரவேற்றது.

ஹார்வேர்டில் சுப்பாராவ்: பாஸ்டனின் சார்லஸ் ஆற்றங்கரையில் உள்ள ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தில் வெப்ப மண்டல நோயியலில் பட்டயம் [Diploma in Tropical Medicine] தகுதிக்காகப் படித்துக்கொண்டே அங்குள்ள மருத்துவமனையில் துப்புரவாளராகவும் பணிபுரிந்தார் சுப்பாராவ். பட்டயத் தகுதியை 1924 ஜுன் மாதத்தில் பெற்றுக்கொண்டு, அதே ஆண்டு அந்தப் பல்கலைக் கழகத்திலேயே சைரஸ் ஃபிஸ்க் [Cyrus Fiske] எனும் பேராசிரியரின் கீழ் இணைந்து ஆராய்ச்சிப் பட்டத்திற்குப் பதிவு செய்துகொண்டார்.
உடலின் பாஸ்பேட் மற்றும் பாஸ்பேட் இணைந்த பிற மூலக்கூறுகளை ஆராய்ந்தார். அதன் பயனாக 1925ஆம் ஆண்டு, குருதியில், சிறுநீரில், பாஸ்பேட் மூலக்கூறினை அளவிடும் முறையினை [colorimetric phosphate estimation method] வடிவமைத்து வெளியிட்டு, அறிவியல் உலகின் கவனத்தைப் பெற்றார். அடுத்த ஆண்டிலேயே ஃபிஸ்க்-சுப்பாராவ் பாஸ்பேட் அளவீட்டு முறை பரவலான பயன்பாட்டுக்கு வந்தது, பாட நூல்களிலும் இடம்பெற்றது. நூறாண்டுகளுக்குப் பின்னர் இன்றும் மருத்துவ அறிவியலில் ஃபிஸ்க்-சுப்பாராவ் முறை பயனில் இருப்பது இந்தக் கண்டறிதலின் மேன்மையை உணர்த்துகிறது. ஹார்வேர்டு ஆய்வகத்தில் பல சோதனைகள் ஒரே நேரத்தில் நடந்துகொண்டிருக்க, அவை அனைத்தையும் இடையறாது கண்காணித்தவாறு சுழன்று கொண்டேயிருப்பது அவரது இயல்பான தினசரிச் செயல்பாடு.
What's Your Reaction?