ஆபத்தான நிலையில் ஈரோடு எலத்தூர் பறவைகள்; காரணம் என்ன?
இதுவரை 693 வகையான உயிரினங்கள் எலத்தூர் குளத்தில் வாழ்வதாக ஆவணம் செய்யப்பட்டுள்ளது. இதில் 204 பறவைகள், 174 பூச்சி இனங்கள், 228 தாவர வகைகள், 17 ஊர்வன, 18 எட்டுக்காலிகள், 20 மிதவை நுண்ணுயிரிகள், 8 பாலூட்டிகள், 24 இதர பல்லுயிர்கள் உள்ளடங்கும்.

உலகளாவிய முன்னெடுப்பான ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக (2024 - 2025) தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிக வகையான பறவைகள் வாழும் வாழ்விடங்களில் முதலாவது இடத்தைப் பெற்றுள்ளது ஈரோடு மாவட்டத்தின் எலத்தூர் குளம். இதுவரை 204 பறவைகள் இங்கு வாழ்வதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 79 பறவைகள் மத்திய ஆசிய பறவைகள் வழித்தடத்தில் வலசை வந்து செல்லும் பறவைகளாகும். 72 வகையான உள்ளூர் பறவைகள் இக்குளத்தில் இனப்பெருக்கம் செய்து வாழ்கின்றன.
குளத்தில் சிசு, கருவேலம், வாகை உள்ளிட்ட மரங்களில் பாம்புத்தாரா, வெள்ளை அன்றில், பெரிய நீர்க்காகம், இந்திய நீர்க்காகம், சிறிய நீர்க்காகம், நெடலைக் கொக்கு, இராக்கொக்கு போன்ற பறவைகள் கூடுகள் அமைத்து இனப்பெருக்கம் செய்கின்றன. மேலும் இக்குளம் ஆயிரக்கணக்கான கொக்குகள், அன்றில்கள், சில நூறு நாரைகள், வாத்துக்கள், பாம்புத்தாரா, மஞ்சள் மூக்கு நாரை மற்றும் பல பறவைகளுக்கு இரவு தங்குமிடமாக (Roosting Site) உள்ளது.
What's Your Reaction?