‘அன்று அதிகாலை 2.30 மணிக்கு தகவல் கிடைத்தது’ - இந்திய தாக்குதல் பற்றி மனம் திறந்த பாக். பிரதமர்
தங்கள் நாட்டின் முக்கிய விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உறுதி செய்துள்ளார். அதிகாலை 2.30 மணி அளவில் அந்த தகவலை ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர் தன்னிடம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

இஸ்லாமாபாத்: ஆபரேஷன் சிந்தூரின்போது தங்கள் நாட்டின் முக்கிய விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது பற்றி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முதன்முறையாக வெளிப்படையாகப் பேசியுள்ளார். கடந்த 10-ம் தேதி அதிகாலை 2.30 மணி அளவில் அந்தத் தகவலை ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர் தன்னிடம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, நேற்று (வெள்ளிக்கிழமை) இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்வில் இதனை அவர் தெரிவித்துள்ளார். “மே.10 அதிகாலை 2.30 மணி அளவில் எனக்கு ஜெனரல் முனீர் போன் செய்தார். அப்போது நமது நாட்டின் முக்கிய விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர் கூறினார். அது மிகவும் சங்கடம் தந்த தருணம்” என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தெரிகிறது.
What's Your Reaction?